ENG vs IND, 1st Test: 278 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமிலுள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவுக்கு முன்னரே 183 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் - ரோஹித் சர்மா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ரோஹித் சர்மா 36 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்மளித்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் 7ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார்.
பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கே.எல்.ராகுல் 84 ரன்களிலும், ஜடேஜா 56 ரன்களிலும் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 95 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.