ENG vs IND 1st Test, Day 5: வெற்றியை வசமாக்குமா இந்திய அணி?
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதன் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் ஒரு வி்க்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா 12, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் நேற்றைய 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும் பொறுமையாக ஆடிய கேப்டன் ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 21ஆவது சதத்தை நிறைவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஷர்துல் தாக்கூர், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி்னர்.
இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. 2ஆவது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய இந்திய அணி 65 நிமிடங்கள் மட்டுமே பேட் செய்தது. இதில் கே.எல். ராகுல் 26 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் டெஸ்ட் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 152 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய கடைசிநாள் ஆட்டத்தில் முதல் ஒருமணிநேரம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
புதிய பந்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும், விக்கெட் விழுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கும். அதனால் முதல் ஒரு மணிநேரம் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழாமல் தடுத்து நிலைத்து நின்றுவிட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.
கேப்டன் கோலி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் அவரின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.