ENG vs AUS, 2nd ODI: கேரி, ஸ்டார்க் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவேற்றியைப் பதிவுசெய்த 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன.
இதனையடுத்து இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது சமீபத்தில் தொடங்கியது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸில் உள்ள ஹெடிங்க்ளே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - மேத்யூ ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்த முதல் விக்கெட்டிற்கு 46 ரன்களை அடித்திருந்த நிலையில் 29 ரன்களில் டிராவிஸ் ஹெட்டும், அவரைத்தொடர்ந்து 29 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய மார்னஷ் லபுஷாக்னே 19 ரன்களிலும், அரைசதம் கடந்து விளையாடிய வந்த மிட்ச்ல் மார்ஷ் 60 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடி அணியை சரிலிருந்து மீட்டெடுத்தார். ஆனால் மறுபக்கம் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் 7, ஆரோன் ஹார்டி 23, மிட்செல் ஸ்டார்க் 0, ஆடம் ஸாம்பா 3 என விக்கெட்டை இழக்க, இறுதிவரை அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித், ஜேக்கப் பெத்தெல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹேரி ப்ரூக் 4 ரன்களிலும் என விக்க்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த பென் டக்கெட் - ஜேமி ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 32 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழக்க, 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமி ஸ்மித்தும் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஆதில் ரஷித் 27, பிரைடன் கார்ஸ் 26, ஜேக்கப் பெத்தெல் 25 ரன்கள் என சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், ஆரோன் ஹார்டி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருதை வென்றர்.