ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பில் சால்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisement

மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வழக்கமான கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதன் காரணமாக டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அணியில் இடம்பிடித்துள்ளார்.  இதுதவிர்த்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், ஸேவியர் பார்ட்லெட் ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்ட் ஆரோன் ஹார்டி, கூப்பர் கனோலி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேசமயம் இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரைடன் கார்ஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

Advertisement

அதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் டிராவிஸ் ஹெட் - மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியதோடு, அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த டிராவி ஹெட் 31 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 28 ரன்களைச் சேர்த்திருந்த மேத்யூ ஷார்ட்டும் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அபாரமாக விளையாடி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 29 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 50 ரன்கள் எடுத்த கையோடு மெக்குர்க் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 ரன்களுக்கும், டிம் டேவிட் ஒரு ரன்னிற்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் கேமரூன் க்ரீன் 13 ரன்களையும், ஆரோன் ஹார்டி 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த போதும் 193 ரன்களைக் குவித்து அசத்தியது. இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் வில் ஜேக்ஸ் 12 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் ரன்கள் ஏதுமின்றி நடையைக் கட்டினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட்டும் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 39 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த் லியாம் லிவிங்ஸ்டோன் - ஜேக்கப் பெத்தெல் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். 

Advertisement

இதில் லியாம் லிவிங்ஸ்டோன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த ஜேக்கப் பெத்தெல் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய சாம் கரண் ஒரு ரன்னுடன் நடையைக் கட்ட, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோனும் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 87 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து பிரைடன் கார்ஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தாலும், இங்கிலாந்து அணியானது 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தும் அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய லியாம் லிவிங்ஸ்டோன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News