ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!

Updated: Tue, Jul 12 2022 19:41 IST
Image Source: Google

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களமிறங்கினர். ஜேசன் ராயை 2ஆவது ஓவரிலேயே ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பும்ரா. அதே 2ஆவது ஓவரின் கடைசி பந்திலேயே ஜோ ரூட்டையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரான பென் ஸ்டோக்ஸை ஷமி டக் அவுட்டாக்கினார். ராய், ரூட், ஸ்டோக்ஸ் ஆகிய 3 முக்கியமான வீரர்களும் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, இங்கிலாந்து அணி வெறும் 7 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவ் 7 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவிடமே விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - மொயின் அலி இணை ஓரளவு அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். 

ஆனால் இந்த இணையாலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். பின் 14 ரன்கள் எடுத்திருந்த மொயீன் அலியை பிரஷித் கிருஷ்ணா வெளியேற்ற, மறுமுனையில் 30 ரன்களுடன் விளையாடி வந்த ஜோஸ் பட்லரை முகமது ஷமி வழியனுப்பி வைத்தார். 

இதையடுத்து வந்த ஓவர்டன் 8 ரன்களில் ஷமியிடம் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 15 ரன்கள் எடுத்திருந்த் கார்ஸ் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இந்த விக்கெட்டின் மூலம் ஜஸ்ப்ரித் பும்ரா இப்போட்டியில் தனது 5ஆவது விக்கெட்டையும் கைப்பற்றினார். 

அதன்பின் 21 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வில்லியும், பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 19 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை