மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு!

Updated: Thu, Sep 25 2025 20:18 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. இந்த நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும்  இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் அபாரமாக விளையாடியதுடன் சதமடித்தும் அசத்தினார். இந்த போட்டியில் அவர் 120 ரன்களை சேர்த்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதேசமயம் அந்த அணியில் இளம் வீராங்கனை எம்மா லம்ப் 84 ரன்களைச் சேர்க்க, இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்களைக் குவித்தது. இந்திய மகளிர் அணி தரப்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், அருந்ததி ரெட்டி, ஸ்ரீ சாரணி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இந்திய அணிக்கு உமா சேத்ரி மற்றும் ஹர்லீன் தியோ ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கியுள்ளனர். இந்த நிலையில், இப்போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார். அதேசமயம், அவர் வீல் சேரில் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் அவர் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை காயமடைந்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அருந்ததி ரெட்டி தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், பந்துவீச்சு துறையையும் பலவீன படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சாரணி, சினே ராணா, உமா சேத்ரி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை