கோலி, பந்த், பும்ரா ரிட்டன்ஸ்; வாய்ப்பை இழக்கும் வீரர்கள் யார்?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அரைசதம் விளாச, சூர்யகுமார் 39 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் எடுத்தனர்.
இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 198 ரன்களை விளாச, இங்கிலாந்து அணி 148 ரன்களுக்கு சுருண்டது.
இந்த நிலையில், பிர்மிங்காமில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர். ஏற்கனவே விளையாடி வரும் அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுவதால், தற்போது எந்த வீரர்களை நீக்கிவிட்டு சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.
விராட் கோலி அணியின் மூத்த வீரர். எப்போதும் 3ஆம் வரிசையில் இறங்க கூடியவர். ஆனால் சில போட்டிகளாக 3ஆவது வரிசையில் விளையாடி வரும் தீபக் ஹூடா சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடி இருக்கிறார். இதனால், தீபக் ஹூடாவை எப்படி நீக்குவது என்ற தலைவலி ஏற்பட்டுள்ளது.
இதே போன்று அதிரடி வீரர் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு திரும்புகிறார். அவர் நடுவரிசையில் விளையாட கூடியவர். ஆனால் நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். இதனால் பந்த் விக்கெட் கீப்பர் என்பதால் அவருக்கு பதிலாக அணியில் இருக்கும் இஷான் கிஷனை தான் நீக்க வேண்டும்.
இஷான் கிஷனை நீக்கினால், அப்போது தொடக்க வீரர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே பந்தை தொடக்க வீரராக டி20, ஒருநாள் போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அப்படி ஒரு திட்டத்தை தான் பிசிசிஐ செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ஆர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக பும்ரா களமிறங்குவார் என தெரிகிறது.