இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரிஷப் பந்தின் அதிரடியான சதத்தின் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதையடுத்து 2ஆவது நாளான நேற்று முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 146 ரன்களும், ஜடேஜா 104 ரன்களும், பும்ரா 31 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னும், சாக் கிராலி 9 ரன்னுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஓல்லி போப் 10 ரன்னுடன் வெளியேறினார்.
இதற்கிடையில் இங்கிலாந்து 31 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்தின் நம்பிக்கையாக திகழ்ந்த ஜோ ரூட்டை 31 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஜேக் லீச்சும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களைச் சேர்த்து தடுமாறியது.
இதையடுத்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பேர்ஸ்டோவ் 91 ரன்களுடனும், பில்லிங்ஸ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.