ENG vs IND: பும்ராவுடனான மோதல் குறித்து மனம் திறந்த ஆண்டர்சன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. அதேசமயம் ரசிகர்கல் யாரும் அவ்வளவு எளிதில் இப்போட்டியை மறந்துவிட மாட்டார்கள்.
ஏனெனில் இதில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர்.பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இடையில் புஜாரா - ரஹானே ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்தனர். பிறகு, 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி - பும்ரா ஜோடி பிரமாதமாக விளையாடியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது.
முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது.
ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம், இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை கார்னர் செய்தது தான். ஏனெனில் இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறி வைத்து ஒரு ஓவர் முழுக்க பவுன்ஸ் பந்துகளாக பும்ரா வீசினார். இதில், ஆண்டர்சனுக்கு தோள்பட்டை, நெஞ்சுப் பகுதி என ஆங்காங்கே அடியும் பட்டது.
இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே பும்ராவை நோக்கி சரமாரியாக வார்த்தைகளை அள்ளி வீசினார். பும்ராவிடம், "நீ ஏன் இவ்வளவு வேகமாக எனக்கு பந்துவீசுகிறாய்? நான் உனக்கு இப்படித் தான் வேகமாக வீசினேனா?" என்று ஆண்டர்சன் கோபத்தில் வார்த்தைகளை வீசினார். பதிலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியும் வார்த்தைகளை வீசினார்.
இந்த மோதல், இந்திய அணி 2ஆம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யயத் தொடங்கியதில் இருந்து மீண்டும் நீடித்தது. கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆண்டர்சன் நக்கலாக சில வார்த்தைகளை விட, சூடான கோலி, "பும்ராவை போன்று என்னையும் திட்டலாம் என்று பார்க்கிறீர்களா?.. இது ஒன்னும் உன் வீட்டின் கொல்லைப் புறம் கிடையாது, ஜாலியாக இருக்க" என்று பதிலடி கொடுத்தார்.
அதன் பிறகு, பும்ரா களமிறங்கிய போது, இங்கிலாந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பேட்ஸ்மேனுக்கு ஃபீல்ட் செட் செய்வதை விட, பும்ராவுக்கு கடுமையான ஃபீல்ட் செட் செய்தனர். பவுன்சர் பந்துகளை தொடர்ந்து வீசினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். பிறகு, மார்க் வுட் வீசிய பந்து, பும்ராவின் ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இந்த பந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
இந்நிலையில், பும்ராவுடான மோதல் குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "நான் பேட்டிங் செய்ய வந்த போது, உண்மையில் பிட்ச் மெதுவாக ரியாக்ட் செய்தது. நான் களமிறங்கிய போது, பும்ரா எனக்கு வீசிய பந்துகள் அனைத்தும் அவர் எப்போதும் வீசம் வேகத்தை விட அதிகமாக இருப்பதாக ஜோ ரூட் என்னிடம் கூறினார். முதல் பந்து மணிக்கு 90 மைல்கள் வேகத்தில் இருந்தது. என் கேரியரில் நான் இதுவரை இப்படி உணர்ந்ததில்லை. அவர் என்னை அவுட்டாக்கி வெளியேற்ற முயற்சிக்கவில்லை என்பதை உணர்ந்தேன்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
என்னை அவுட்டாக்கும் எண்ணம் அவரிடம் இல்லை. ஆனால், பந்துகளை மட்டும் வேகமாக வீசிக் கொண்டிருந்தார். அவர் அந்த ஓவரில் எப்படியும் 10, 11, 12 பந்துகள் வீசியிருப்பார். அடுத்தடுத்து நோ-பால்களை வீசினார். ஷார்ட் பந்துகளை வீசினார். ஸ்டெம்ப்பை நோக்கி இரண்டே இரண்டு பந்துகளை மட்டுமே வீசினார். அதையும் நான் தடுத்துவிட்டேன். எனவே என்னைப் பொறுத்தவரை, அந்த ஓவரில் எப்படியாவது தப்பிப்பிழைத்து நின்று ரூட்டிடம் பேட்டிங் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு மட்டும் அவர் அதிவேகமாக பந்துகளை வீசினார்" என்று கூறியுள்ளார்.