ENG W vs IND W, only Test: சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஷஃபாலி; இறுதி நேரத்தில் தடுமாறிய இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹீத்தர் நைட், பியூமண்ட், சோபியா டாங்க்லி ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர்.
இதனால் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அபாரமான தொடக்கத்தை கொடுத்தது. இதில் இருவரும் இணைந்து அரைசதம் கடந்ததுடன், பார்ட்னர்ஷிப் முறையே 167 ரன்களையும் சேர்த்தது.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷஃபாலி வர்மா சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களில் ஆட்டமிழந்து வாய்ப்பை நழுவவிட்டார். அவரைத் தொடர்ந்து 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய பூனம் ராவுத், ஷிகா பாண்டே, மிதாலி ராஜ் ஆகியோரும் வந்தவேகத்திலேயே நடையைக் கட்டி அதிர்ச்சியளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா ரன் ஏதுமின்றியும், ஹர்மன்பிரீத் கவுர் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 209 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய மகளிர் அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.