ENG vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டெவான் கான்வே, டேரில் மிட்செல் சதத்தால் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி சவுதாம்டானில் நேற்று நடைபெற்றது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்ட்டது டாஸ் போடப்பட்டது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - ஹாரி ப்ரூக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 ரன்களை எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் ரன்கள் ஏதுமின்றியும், பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஹாரி ப்ரூக் 2 ரன்களுக்கும், கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து மொயீன் அலி - லியாம் லிவிங்ஸ்டோன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொயீன் அலி 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 33 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சாம் கரண் களமிறங்கினார். ஒருபக்கம் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் சாம் கரண் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவிங்ஸ்டொன் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை களத்தில் இருந்து 9 பவுண்டரி, ஒரு சிக்சர் என 95 ரன்களைச் சேர்த்தார்.
அவருடன் இணைந்து விளையாடிய சாம் கரண் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 34 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்தது. அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும், டெவான் கான்வே 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த வில் யங் - டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 33 ரன்களுக்கும், அரைசதம் கடந்திருந்த டேரில் மிட்செல் 57 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டாம் லேதமும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 26.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.