இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்டில் அவர் பங்கேற்கவில்லை.

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 145.3 ஓவர்களில் 553 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 190, டாம் பிளண்டல் 106 ரன்கள் எடுத்தார்கள். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 3ஆம் நாள் முடிவில், 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. ரூட் 163, ஃபோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இதையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில், இரட்டைச் சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், இன்று போல்ட் பந்தில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஃபோக்ஸ் அரைசதம் அடித்த கையோடு 56 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Advertisement

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 128.2 ஓவர்களில் 539 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் டாம் லேதம் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இந்த விக்கெட்டின் மூலம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 650ஆவது விக்கெட்டையும் வீழ்த்தினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த வில் யங் - டேவன் கான்வே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமும் கடந்தனர்.

Advertisement

பின்னர் 52 ரன்களில் டேவன் கான்வே விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த வில் யங்கும் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ் 3, டாம் பிளெண்டல் 24, மிட்செல் பிரேஸ்வெல் 25, டிம் சௌதி 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஆனாலும் மறுமுனையில் நங்கூரம் போல் நின்ற டேரில் மிட்செல் விக்கெட்டை இழக்காமல் நின்று ஆடி வருகிறார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்துள்ளது.

நியூசிலாந்து தரப்பில் டெரில் மிட்செல் 32 ரன்களுடனும், மேட் ஹென்றி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News