இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவுசெய்து 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதையடுத்து நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் 3ஆவது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஜானி பேர்ஸ்டோவ் ரன்கள் ஏதுமின்றியும், ஜோ ரூட் 4 ரன்களிலும் என டிரண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டேவிட் மாலன் - பென் ஸ்டோக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 96 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் தனது 4ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதற்கிடையில் கேப்டன் ஜோஸ் பட்லர் 38 ரன்களுக்கும், லியாம் லிவிங்ஸ்டோன் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழ்ழக்க, இரட்டை சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளில் 15 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 182 ரன்களைச் சேர்த்து விக்க்ட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்காமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் டிரண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், பென் லிஸ்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.