ENG vs PAK, 2nd T20I: பாகிஸ்தானை பந்தாடி இங்கிலாந்து அணி அபார வெற்றி!

Updated: Sat, May 25 2024 22:32 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது எட்ஜ்பாஸ்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரு உயர்ந்தது. இதில் பில் சால்ட் 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வில் ஜேக்ஸும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் சிறப்பாக விளையாடிய வில் ஜேக்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸார்களுடன் 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 84 ரன்களில் ஆட்டமிழந்து 16 ரன்களில் சதமடிக்கு வாய்ப்பை தவறவிட்டார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் அடுத்தடுத்து ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் 12 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப், இமாத் வசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் மற்றும் சைம் அயுப் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றியும், சைம் அயூப்பும் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் ஃபகர் ஸமான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் ஆசாம் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷதாப் கான் 3 ரன்களிலும், அசாம் கான் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய ஃபகர் சமான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் இணைந்த இமாத் வசிம் மற்றும் இஃப்திகார் அஹ்மத் ஆகியோரும் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்தினர். 

ஆனால் இஃப்திகார் அஹ்மத் 23 ரன்களிலும், இமாத் வசிம் 22 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இதனால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை