ENG vs WI, 2nd Test: ரூட், ப்ரூக் சதம்; சோயப் பஷீர் அபார பந்துவீச்சு - விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18 ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்து வலிமையான தொடக்கத்தை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும், ஜெய்டன் சீல்ஸ், கெவின் சிக்ளெர், கெவம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேவ்ம் ஹாட்ஜ் 120 ரன்களையும், அலிக் அதானாஸ் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷுவா டா சில்வா 82 ரன்களைக் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் முன்னிலை வகித்தது. இதையடுத்து. இதனையடுத்து 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த பென் டக்கெட் - ஒல்லி போப் இணை மீண்டும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஒல்லி போப் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் பென் டக்கெட்டும் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தையும், நட்சத்திர வீரர் ஜோ ரூட் தனது 33ஆவது சதத்தையும் பதிவுசெது அசத்தினர். பின்னர் ஹாரி ப்ரூக் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்களையும், ஜோ ரூட் 10 பவுண்டரிகளுடன் 122 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதேசமயம் இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மைக்கேல் லூயிஸ் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சிறப்பாக விளையாடிய கிரேக் பிராத்வைட்டும் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜேசன் ஹோல்டர் 37 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிகொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.