சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் கிறிஸ் வோக்ஸ்!
இங்கிலாந்து அடுத்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்திய டெஸ்ட் தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், தற்சமயம் அதிலிருந்து மீண்டுள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மார்க் வுட், சோயப் பஷீர் ஆகியோரும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடிய கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்க்ளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கான சரியான நேரம் இது என்று நினைக்கிறேன். அதனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். சிறு வயதிலிருந்தே இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவாக இருந்தது. ஆனால் தற்போது 15 ஆண்டுகளாக இங்கிலாந்துக்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டு அறிமுகமான கிறிஸ் வோக்ஸ், 62 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதங்களுடன் 2034 ரன்களையும்,192 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் 33 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், 122 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதையடுத்து கிறிஸ் வோக்ஸுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.