உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிகளை இழந்த நியூசிலாந்து, இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டு நிருபணமான நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இரு அணிகளுக்கும் தலா மூன்று புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும் ஐசிசி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பின்னடைவை சந்தித்துள்ளன.
அதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணி இந்த புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் நீடித்து வந்த நிலையில், ஐசிசி அபராதம் காரணமாக தற்போது 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றாலும், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கலை சந்தித்துள்ளது. அதேசமயம் இலங்கை அணியானது புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியதுடன் தங்களது வாய்ப்பினை பிரகாசப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை தொடர்ந்து 6ஆம் இடத்திலேயே நீடித்து வருகிறது. மேற்கொண்டு நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 61.11 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 59.26 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணிய்னது 57.69 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நீடித்து வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் இத்தொடருக்கான இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் எதிர்வரும் நாள்களில் அடுத்த போட்டியில் விளையாடவுள்ளதால் இந்த பட்டியலில் சில மாற்றங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.