இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
ENGW vs INDW, 2nd ODI: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததுடன், புதிய சாதனையையும் படைத்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட இப்போட்டியானது 29 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 42 ரன்களையும், தீப்தி சர்மா 30 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் டாமி பியூமண்ட் 34 ரன்னிலும், நாட் ஸ்கைவர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க, மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலந்து அணிக்கு 24 ஓவர்களில் 115 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது.
அதன்பின் இப்போட்டியில் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஏமி ஜோன்ஸ் 46 ரன்களையும், சோபியா டங்க்லி 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 21 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலந்து அணி வெற்றிபெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் மண்ணில் அதிக போட்டிகளில் வென்ற சாதனையையும் படைத்தது. முன்ந்தாக ஆஸ்திரேலிய மகளிர் அணி 120 போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் இங்கிலாந்து மகளிர் அணி 121 வெற்றிகளைப் பதிவுசெய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி 86 வெற்றுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
Also Read: LIVE Cricket Score
சொந்த மண்ணில் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள்
- 121- இங்கிலாந்து (182 ஒருநாள் போட்டிகளில்)*
- 120- ஆஸ்திரேலியா (146 போட்டிகளில்)
- 86- நியூசிலாந்து (166 போட்டிகளில்)
- 81- இந்தியா (131 போட்டிகளில்)