ஆஸ்திரேலியாவை அரையிறுதியிலிருந்து வெளியேற்றிய இங்கிலாந்து!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியும், இலங்கை அணியும் மோதின. இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பதும் நிஷன்கா 67 ரன்களும், பனுகா ராஜபக்ஷ 22 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி, அலெக்ஸின் அதிரடி ஆட்டத்தின் மூலம் முதல் 7 ஓவரிலேயே 75 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் எளிய இலக்கை எட்டவும் இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை எடுத்து கொண்டது.
ஹாரி ப்ரூக் (4), லிவிங்ஸ்டோன் (4) போன்ற வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், கடைசி வரை தாக்குபிடித்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது. 7 புள்ளிகளை பெற்றிருந்தாலும், குறைவான ரன்ரேட்டின் காரணமாக ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை விட்டு வெளியேறியது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் வெளியேறியது ஆஸ்திரேலிய அணி.