5th Test Day 3: அஸ்வின் அபார பந்துவீச்சு; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். அதேபோல் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்வால், சர்ஃப்ராஸ் கான், அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 473 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜஸ்ப்ரித் பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் குல்தீப் யாதம் 30 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜஸ்ப்ரித் பும்ராவும் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 477 ரன்கள் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 259 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் பென் டக்கெட் 2 ரன்களிலும், ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப்பும் 19 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். பின்னர் ஜோ ரூட்டுடன் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடும் முனைப்பில் சிக்சரும், பவுண்டரிகளுமாக விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. இதில் ஜோ ரூட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதையடுத்து 156 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.