மகளிர் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
மகளிர்ர் டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி எமி ஹண்டர் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 17 ரன்களிலும், கேப்டன் டெலனி 12 ரன்களிலும், ரிச்சர்ட்சன் ரன் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீராங்கனையான கேபி லூயிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் அயர்லாந்து மகளிர் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன், சாரா கிளென் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சோபியா டாங்க்லி, டேனியல் வையட், நாட் ஸ்கைவர், ஹீதர் நைட் என நட்சத்திர வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இருப்பினும் அலீஸ் கேப்ஸி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அரைசதம் கடந்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.