விராட் கோலியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் - வில் ஜேக்ஸ்!

Updated: Tue, May 28 2024 15:27 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து. அதேசமயம் இங்கிலாந்து அணியும் தொட்ரை வெல்ல ஆர்வம் காட்டும் என்பதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் இளம் வீரர் வில் ஜேக்ஸ், இந்திய அணி வீரர் விராட் கோலியிடமிருந்து விலைமதிப்பற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்தாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல் தொடரின் பெரிய விஷயம் என்னவென்றால், உங்களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் சந்தர்ப்பம் கிடைக்கும். நீங்கள் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு ஆட்டமும் சர்வதேச கிரிக்கெட்டைப் போன்று இருக்கும்.

 விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சியளிப்பார். சேசிங்கில் எப்படி அதிரடியாக ரன்களை குவிப்பது குறித்த விலைமதிப்பற்ற விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. மேலும் அவர் களத்தில் செய்யும் விஷயங்கள், அவர் போட்டியை அணுகும் விதம், போட்டியில் அவர் செய்யும் அனைத்தும் 100 சதவீதம் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். 

அவர் நீண்ட காலமாக இதனைச் செய்து வருகிறார். மேலும் கடினமான பிட்சுகளிலும் அவர் சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது, அவரைப் போலவே நீங்களும் விளையாட வேண்டும் என்று விருப்பத்தை உங்களுக்குள் பதியசெய்வார். உலகக் கோப்பையில் விளையாடுவது என்பது சிறுவயதில் இருந்தே எனது கனவாகும். அதைச் செய்ய நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இப்போது அக்கனவு நிறைவேறியுள்ளது. அதற்காக தீவிரமாக தயாராகியும் வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை