ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!

Updated: Wed, Jun 26 2024 21:52 IST
ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து! (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி டர்ஹாமில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூலாந்து மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இங்கிலாந்து மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் சூஸி பேட்ஸ் 16 ரன்களுக்கும், பிலிம்மெர் 29 ரன்களுக்கும், அமெலியா கெர் 10 ரன்களுக்கும், கேப்டன் சோஃபி டிவைன் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஹலிடே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதமும் அடித்தார் 

பின்னர் ஹலிடேவும் 51 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணியானது 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சார்லி டீன் 4 விக்கெட்டுகளையும், சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு டாமி பியூமண்ட் - மையா பௌச்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொண்டுத்தனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 137 ரன்களையும் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

அதன்பின் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 67 ரன்களைச் சேர்த்திருந்த மையா பௌச்சர் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாமி பியூமண்ட் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 21.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை