இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இநிந்லையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்டாலில் நடைபெற்றது. 

Advertisement

மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - பிலிம்மெர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிலிம்மெர் 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சூஸி பேட்ஸும் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அமெலியா கெர் - கேப்டன் சோஃபி டிவைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

Advertisement

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெலியா கெர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சோஃபி டிவைன் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடித்திருந்த அமெலியா கெரும் 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆதன்பின் களமிறங்கிய ஹாலிடே 31 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக நியூசிலாந்து மகளிர் அணி 42 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லாரன் பெல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் டாமி பியூமண்ட் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 9 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீராங்கனை மையா பௌச்சர் 19 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய சோஃபியா டங்க்லி 15 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 72 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

அதன்பின் இணைந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஏமி ஜோன்ஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அலிஸ் கேப்ஸியும் பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணியானது 38.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸகைவர் பிரண்ட் 76 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 35 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய லாரன் பெல் ஆட்டநாயகி விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News