தான் மற்றும் தோனி விளையாடிய இடத்தில் யாருக்கு வாய்ப்பு தர வேண்டும் - யுவராஜ் சிங் கருத்து!
இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்கு மிகமுக்கிய காரணமாக யுவராஜ் சிங் பங்காற்றினார். பேட்டிங் மட்டும் இல்லாமல் பந்துவீச்சிலும் அவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இன்று யுவராஜ் சிங் வருகின்ற உலகக் கோப்பை குறித்தும் இந்திய அணி குறித்தும் நிறைய கருத்துக்களை கூறி வருகிறார். அவருடைய கருத்துக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் யுவராஜ் சிங் வழக்கமாக விளையாடிய நான்காம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? மகேந்திர சிங் தோனி விளையாடிய ஐந்தாம் இடத்தில் யார் விளையாட வேண்டும்? என்று தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், “கேஎல் ராகுல் இப்போது நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது. அந்த நிலையில் அவர் விளையாட 15 முதல் 20 ஆட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும். காயத்தில் இருந்து நீண்டு வந்த அவர் ஆசியக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நூறு ரன்கள் எடுத்தார்.
இலங்கைக்கு எதிராக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முக்கியமான 39 ரன்கள் எடுத்தார். இப்போது அவர் நல்ல நிலையில் இருக்கிறார் எனவே அவரை நான்காம் இடத்தில் வைத்து விளையாடலாம். பேட்டிங் வரிசையில் நான்காம் இடம் என்பது மிகவும் முக்கியமான ஒரு இடமாகும். குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் சீக்கிரத்தில் வெளியேறினால் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புண்டு.
அவர்களுக்குப் பந்தை விடவும், ஷார்ட் பந்தை அடிக்கவும், பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஐந்தாவது இடத்திற்கு ஸ்ரேயாஸ் இல்லை இசான் கிஷான் என்று அவர்கள் பார்க்கிறார்கள். இசான் கிஷான் இலங்கைக்கு எதிராக தடுமாறிய போதும் ஸ்ட்ரைக்கை சுழற்சி செய்ய முயற்சி செய்தார்.அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முடிவதால், அவரை நான் அந்த இடத்திற்கு விரும்புகிறேன்.
நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர்கள் நான்காம் இடத்திற்கு அம்பதி ராயுடுவை தேர்ந்தெடுத்தார்கள். அவர் ஆஸ்திரேலியாவுடன் சரிவர விளையாடாமல் போக அவரை கைவிட்டார்கள். பின்பு விஜய் சங்கர் அடுத்து அனுபவம் இல்லாத ரிஷப் பந்து என்று சென்றார்கள். ஒரு உலகக் கோப்பைக்கு ஒருவரை கூட்டிச் செல்லும் பொழுது அவர் குறிப்பிட்ட இடத்தில் 20 போட்டிகளாவது விளையாடி இருக்க வேண்டும். எங்கள் முதல் உலகக் கோப்பைக்கு முன்பாக நான் 35 ஆட்டங்களிலும், முகமது கைப் 25 ஆட்டங்களிலும் விளையாடி இருந்தார்” என்று கூறியுள்ளார்.