IND vs AUS: இரண்டே போட்டியில் 31 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெல்லி டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகள் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற முடியும்.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை நம்பர் ஒன் என்ற கிரீடத்தை காக்க வேண்டும் என்றால் இந்தியாவில் தங்களது திறமையை நிரூபித்து காட்ட வேண்டும். காரணம் கடந்த 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை. மாறாக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வென்றிருக்கிறது. இதற்கு பழி தீர்க்க வேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் காயத்திலிருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலியா அணியை சிதறடித்து விட்டார்கள். உலகின் நம்பர் ஒன் அணியை 177 ரன்ளுக்கும் 91 ரன்களுக்கும் சுருட்டிய இந்திய அணி தற்போது இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை 113 ரன்களில் இரண்டாவது இன்னிங்ஸில் சாய்த்தது.
இதன் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டியில் மொத்தம் உள்ள 40 விக்கெட்டுகளை இந்த ஜோடி மட்டுமே 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறது. இதில் ஜடேஜா 17 விக்கெட்டுகளையும் அஸ்வின் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். மூன்று மாதத்திற்கு முன்பு எழுந்து நடக்க முடியாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஜடேஜா தற்போது ஒரே இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக டெல்லி டெஸ்டில் மூன்றாவது நாளில் ஆட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் 9 விக்கெட்டுகளை இந்த ஜோடி போட்டி போட்டு வீழ்த்தி இருக்கிறது. அதற்கு முதல் நாள் இரவு தான் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடி காட்டினர் . அடுத்து விடிந்ததும் இந்த ஜோடி தக்க பதிலடி கொடுத்துள்ளது. அஸ்வின் ஜடேஜா ஜோடி பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்களும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.