ஓய்வை அறிவித்தார் உலகக்கோப்பை ஹீரோ ஜோகிந்தர் சர்மா!

Updated: Fri, Feb 03 2023 18:41 IST
Fast Bowler Joginder Sharma Announces Retirement From All Forms Of Cricket (Image Source: Google)

கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், முதல் டி20 உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. 

அதிலும் அப்போட்டியில் இந்திய அணி தரப்பில் ஜோகிந்தர் சர்மா வீசிய அந்த கடைசி ஓவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர் நெஞ்சிலும் மறக்க முடியாத தருணமாக என்றென்றும் இருக்கும். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஓவரை வீசும் பொறுப்பை கேப்டன் தோனி, ஜோகிந்தர் சர்மா வசம் ஒப்படைத்தார்.

ஓவரின் முதல் பந்தை வைட் வீசிய அவர், இரண்டாவது பந்தில் மிஸ்பா-உல்-ஹக் சிக்ஸர் விளாசி இருந்தார். மூன்றாவது பந்தில் ஸ்கூப் ஆடி பைன்-லெக் திசையில் கேட்ச் ஸ்ரீசாந்த் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருப்பார் மிஸ்பா. அதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்று அசத்தி இருக்கும்.

அதன் மூலம் ஜோகிந்தர் சர்மா பிரபலமானார். இருந்தாலும் சர்வதேச அளவில் அதுதான் அவரது கடைசி போட்டி. ஹரியாணா அணிக்காக 2002 முதல் 2017ஆம் ஆண்டு வரையில் அவர் விளையாடி உள்ளார். ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது ஹரியாணா மாநில காவல்துறையில் மூத்த காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தனது ஓய்வு குறித்து ஜோகிந்தர் சர்மா, “உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். 2002 முதல் 2017 வரையிலான காலம் என் வாழ்நாளின் பொற்காலம். இந்திய அணிக்காக விளையாடியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ, ஹரியாணா கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹரியாணா அரசுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் சார்ந்த மற்றொரு பக்கத்தில் எனது பயணத்தை தொடங்க உள்ளேன். அதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை