மேஜர் லீக் கிரிக்கெட் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவிக்க, அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித் தள்ளினார்.

Advertisement

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஃபின் ஆலன் அரைசதம் கடக்க, யூனிகார்ன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களைக் குவித்தது. பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 18 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். ஆனாலும் தனது அதிரடியை கைவிடாத ஃபின் ஆலன் சதமடித்து மிரட்டிய நிலையில், 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 101 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களையும், ஹசன் கான் 27 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 200 ரன்களைக் குவித்தது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - டெவான் கான்வே இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபாஃப் டூ பிளெசிஸ் 45 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி 19 ரன்களுக்கும், மிலிந்த் குமார் 2 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான டெவான் கானவே அரைசதம் கடந்தார். பின்னர் அவருடன் இனைந்த ஜோஷுவா ட்ரொம்ப் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பவுண்டரிகளை பறக்கவிட்டு தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், ஜோஷுவா ட்ரோம்ப் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்களையும் சேர்த்தனர். 

இருவரும் இறுதிவரை போராடிய நிலையிலும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 10 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியாசத்துடன் நடப்பு சீசன் எம்எல்சி தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதனையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் - சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News