இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.
முன்னதாக அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்தது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் காரணமாக அவருக்கு கேப்டன் பதவி வழங்கவில்லை என தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற சந்தேகமும் எழத்தொடங்கியுள்ளது. மேற்கொண்டு அவர் பந்துவீச்சை நிரூபித்தால் மட்டுமே ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்க்கும் என்ற பேச்சுகளும் எழுந்து வருகின்றனர். அதனால் அவர் தனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சில் மேம்பட்டால் மட்டுமே அணியில் வாய்ப்பை பெறுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தனது உடற்தகுதியில் கவனம் செலுத்துவதுடன் முழு பிட்னஸுடன் பந்துவீசினால் அவர் தொடர்ச்சியாக அணியில் விளையாடுவார் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஹர்திக் பாண்டியா தொடர்ந்து விளையாடுவது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். ஆனால் அதேசமயம் ஒரு போட்டியில் முழுமையாக விளையாட உடற்தகுதி என்பது மிகவும் முக்கியம் என்று நான் நம்புவேன்.
எனவே டி20 கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். மேலும் அவர் வலுவாக ஃபிட்டாக இருக்கிறோம் என்று நினைத்தால் பாண்டியா நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவார். அனால் அவர் மீண்டும் 10 ஓவர்கள் பந்துவீசுவது மிகவும் அவசியமாகும். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் 10 ஓவர்கள் பந்துவீச வேண்டிய இடத்தில், யாரேனும் வந்து மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீசினால் அது அணியின் சமநிலையை பாதிக்கக்கூடும்.
மேலும் ஹர்திக் பாண்டியாவால் ஒவ்வொரு ஆட்டத்திலும் எட்டு முதல் 10 ஓவர்கள் வரை தொடர்ந்து பந்துவீசவும், அவர் செய்யும் விதத்தில் பேட்டிங் செய்தால் நிச்சயம் ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விளையாடுவார் என்று நினைக்கிறேன். மேலும் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடிய விதமும், வெற்றியில் பங்காற்றிய விதமும் அவருக்கு தேவையான உத்வேகத்தை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.