ஐபிஎல் 2025: வார்னர் முதல் பிரித்வி ஷா வரை; ஏலத்தில் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள்!
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சௌதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டினர். அதிலும் குறிப்பாக சில இந்திய வீரர்களுக்கு இந்த ஏலம் மறக்க முடியாத ஏலமாகவும் அமைந்தது.
ஆனால் நடப்பு வீரர்கள் ஏலத்தில் சில முக்கிய வீரர்களுக்கும் கசப்பான விஷயமாக மாறியுள்ளது. அந்தவகையில் இதுவரை ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி, அணிக்கு சாம்பியன் பட்டங்களை வாங்கிக்கொடுத்த சில வீரர்களும், பல அபார சாதனைகளை படைத்த வீரர்களுக்கும் இந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிகளாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி நடப்பு வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட ஏலம் எடுக்கப்படாத 5 நட்சத்திர வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
5. பிரித்வி ஷா
இந்த பட்டியலில் 5ஆம் இடத்தை பிடிப்பவர் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா. ஒரு காலத்தில் பிரையன் லாரா, வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டவர், இன்று மெகா ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு கூட யாராலும் வாங்கப்படவில்லை என்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பிரித்வி ஷாவின் தற்போதைய ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளதால், உள்நாட்டுப் போட்டிகளில் கூட அவரால் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் (283 ரன்கள், 106 ரன்கள் மற்றும் 198 ரன்கள்) அவர் மோசமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அவரை தற்போது எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
4. உமேஷ் யாதவ்
வேகப்பந்து வீச்சாளரான இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கடந்த சீசனில், குஜராத் டைட்டன்ஸ் அணி உமேஷ் யாதவை ரூ. 5.80 கோடிக்கு ஏலம் எடுத்திருந்த நிலையில், தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கூட அவரை எந்த அணியும் வாங்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் தவிர, உமேஷ் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் போன்ற அணிகளிலும் ஒரு பகுதியாக இருந்துள்ளார். ஆனால் அவர்களும் இந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் மீது ஆர்வம் காட்டவில்லை. ஐபிஎல் தொடரில் 8.45 என்ற எகனாமியில் 148 போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளை உமேஷ் யாதம் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. கேன் வில்லியம்சன்
நியூசிலாந்தின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் நடப்பு மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதுடன், தனது ஆட்டத்தின் மூலம் அணிக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடிக்கொடுத்திருந்த தருணத்திலும் அவரை ஏலத்தில் எடுப்பதற்கு எந்த அணியும் முன்வரவில்லை. ஐபிஎல் தொடரில் இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 35 என்ற சராசரியில் 2,128 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. ஷர்துல் தாக்கூர்
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளின் ஒரு பகுதியாக இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூரை, இந்த மெகா ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. அதிலும் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரால், அந்த அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பிடிக்க முடியாமல் இருந்தர். ஐபிஎல் தொடரில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்தூல் தாக்கூர் அதில் 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1.டேவிட் வார்னர்
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர். ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்துள்ள அவர், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் ஆல் டைம் அதிக ரன்கள், சிறந்த வீரர், சிறந்த கேப்டன், சிறந்த ஃபீல்டர் என்ற வரிசையில் டாப் 10 இடங்களுக்குள் எப்போது இருக்கும் டேவிட் வார்னரை இந்த முறை அவரது அடிப்படை தொடக்கையான ரூ.2 கோடிக்கும் எந்த அணியும் ஏலம் கேட்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 184 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் அதில் 4 சதங்களும், 62 அரைசதங்களையும் விளாசியதுடன் 6,565 ரன்களைச் சேர்த்துள்ளார்.