படுமட்டமான பிட்ச்; கபா கிரிக்கெட் மைதானத்திற்கு ஐசிசி வார்னிங்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி அண்மையில் காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இரண்டு நாட்களுக்குள் நடந்து முடிந்தது. அதனால், காபா மைதானத்தின் ஆடுகளத்தை பலரும் விமர்சித்திருந்தனர்.
இந்தச் சூழலில் காபா மைதானத்தின் ஆடுகளம் சராசரிக்கும் கீழ் என்ற ரேட்டிங்கை பெற்றிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன.
இந்தத் தொடரின் முதல் போட்டி கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணி பவுலர்கள் சார்பிலும் மொத்தமாக 34 விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் செயல் என தொடங்கி பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. இதுவே, இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்று இருந்தால் இந்நேரம் வலிய வந்து பலரும் தங்கள் கருத்துகளை சொல்லி இருப்பார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து சொல்லி இருந்தார்.
இந்தச் சூழலில் காபா ஆடுகளத்தை ஆய்வு செய்த ஐசிசி உயர்மட்ட போட்டி நடுவர் குழு உறுப்பினரான ரிச்சர்ட்சன், “ஐசிசி வழிகாட்டுதலின் படி இந்த ஆடுகளத்தில் பந்துக்கும், பேட்டுக்கும் இடையிலான போட்டி சமமாக இல்லை. அதனால் இது பிளோ ஆவெரெஜ் நிலையில் இருக்கிறது” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.