மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரது சதங்கள் காரணமாக முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்த்து அல் அவுட்டானது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும், அலெக்ஸ் கேசி 70 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 28 ஓவர்கள் வீசி 76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணியானது அஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்துள்ளார்.
அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை ஹேசில்வுட் வீசிய நிலையில், அந்த ஓவரின் இரண்டாவது பந்தை விராட் கோலி கவர் டிரைவ் ஆட முயன்றார். ஆனால் அந்த பந்து அவரின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விராட் கோலி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் விராட் கோலி விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
கடந்த சில ஆண்டுகளில் விராட் கோலி வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவுட் சைட் ஆஃப் பந்துகளில் அதிகமுறை விக்கெட்டினை இழந்துள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “விராட் கோலியின் சராசரி இப்போது 48 ஆக சரிந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் அவுட்சைட் ஆஃப் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறுவதே. அதுவே அவரின் பலவீனமாகவும் மாறியுள்ளது” என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.