ஷுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர் - அமித் மிஸ்ரா!

Updated: Tue, Jul 16 2024 14:13 IST
Image Source: Google

ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.  இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று  போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், சிறப்பாக செயல்பட்டுவரும் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

ஏனெனில் சமீபத்தில் முடிந்த ஜிம்பாப்வே தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தார். அதேசமயம் சஞ்சு சாம்சனும் கடைசி டி20 போட்டியில் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆனால் மறுபக்கம் தொடர்ச்சியான செயல்பாடுகள் இல்லாவிட்டாலும் ஒருசில வீரர்களுக்கு அணியில் வய்ப்புகள் கிடைத்து வருதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷுப்மன் கில்லின் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஷுப்மன் கில்லை விட ருதுராக் கெய்க்வாட் சிறந்த வீரர் என்றும், ஆனால் ஷுப்மனுக்கு கொடுப்படும் வாய்ப்புகள் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை என்றும் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறியுள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அமித் மிஸ்ரா, “ஷுப்மான் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்ஸ்மேனாகவே நான் பார்க்கிறேன். முன்பு ஷுப்மன் கில் நன்றாக விளையாடி இருந்தார், அதனால் அவர் பாராட்டப்பட்டார். ஆனால் இப்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது இல்லை ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன, ஒவ்வொருவருக்கும் (ராகுல் டிராவிட்) அவரவர் விருப்பம் இருப்பதால் ஷுப்மன் கில்லிற்கு இன்னும் வாய்ப்புகள் வருகின்றன.

நான் ஒன்றும் ஷுப்மன் கில்லின் எதிரி அல்ல, ஆனால் ருதுராஜ் அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நிறைய சூழ்நிலைகளில் ரன்களை அடித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கேப்டனாக இந்திய அணிக்காகவும் ரன்களை குவித்துள்ளார். எனவே அவர் எப்போதும் ஒரு சிறந்த வீரராக நான் பார்க்கிறேன்.

மேலும், உலகக் கோப்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வைத்திருப்பது போல் ருதுராஜ் கெய்க்வாட்டையும் அணியுடன் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஒரு முழுமையான வீரராக இருக்கிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரால் அணிக்காக ரன்களை குவிக்க முடியும். ஏனெனில் அவருடைய நுட்பமும், போட்டியை அணுகும் விதமும் சிறப்பானதாக உள்ளது” என்று தெரிவித்தார். 

மேலும் ஷுப்மன் கில்லிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது குறித்து பேசிய அவர், “நான் நிச்சயம் ஷுப்மான் கில்லை அணியின் கேப்டனாக்க மாட்டேன், ஏனென்றால் நான் அவரை ஐபிஎல்லில் பார்த்தேன், அவருக்கு எப்படி கேப்டனாக செயல்படுவது என்று தெரியாது, மேலும் அவருக்கு தாம் தான் கேப்டன் என்ற எண்ணமும் இல்லை. இந்திய அணியில் இடம்பிடித்தவர் என்பதற்காக அவரை கேப்டனாக ஆக்கக்கூடாது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

கடந்த சில சீசன்களில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட கில், இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட்டார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்கு தலைமைத்துவ அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய அணி அவரை ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டனாக்கியது என்று தான் நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை