அடுத்த இரண்டு மாதங்கள் இதனை செய்யாதீர்கள் - ஹர்பஜன் சிங் அறிவுரை!
இந்திய கிரிக்கெட்டில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் மகேந்திர சிங் தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பொழுது, அந்த வடிவத்தில் விளையாடுவது குறித்து யாருக்கும் பெரிய சிந்தனை இல்லாத பொழுது வென்றது, அதிர்ஷ்டத்தால் வென்றது என்றெல்லாம் வெளியில் பேசப்பட்டது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை நிரூபிப்பதற்கு, 2011 ஆம் ஆண்டு உள்நாட்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது சாட்சியமாக அமைந்தது. மேலும் தனிப்பட்ட முறையில் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி எப்படியானது என்று நிரூபிப்பதற்கும் அது ஒரு வாய்ப்பாக இருந்தது. இதற்கு அடுத்து இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி என்பது அடிப்படையில் இருந்து மெது மெதுவாக வளர ஆரம்பித்தது.
இந்திய அணியால் பெரிய தொடர்களில் நிலையான வெற்றிகளை பெற முடியும், அதற்கான உலகத்தரமான வீரர்கள் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டது. தற்போது உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதால் அதை வெல்ல வேண்டிய, கட்டாயமும் கூடவே அழுத்தமும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை என்பது ஏற்பட்ட அழுத்தத்தை இந்திய அணி எவ்வாறு சமாளித்தது? எப்படியான முறையில் அழுத்தத்தை எதிர்கொண்டார்கள்? என்பது குறித்து, அப்போது அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “இப்போதைய காலத்திற்கு அப்போது 2011 ஆம் ஆண்டு மிகவும் வேறுபட்ட ஒரு காலக்கட்டம். இப்போது சமூக ஊடகங்களில் எல்லாமே உள்ளன. அப்போது செய்தித்தாள்கள்தான் மிகவும் முக்கியமானவை. இதன் காரணமாக அப்போதைய பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் ஒரு விதியை கொண்டு வந்து செய்தித்தாள்களை யாரும் படிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் மக்கள் சமூக ஊடகங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதீர்கள் பார்க்காதீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!