விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!

Updated: Mon, Aug 05 2024 21:30 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி டையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிப்பதற்கு முன்னதாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கும் படி பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அணியின் மூத்த வீரர்களை நிச்சயம் இத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் இருவரும் அணியில் இடம்பிடித்தனர். 

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான இத்தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி, தங்களுடைய அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 3 மாதங்கள் கழித்து தான் விளையாட உள்ளது. 

இதனால் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இத்தொடரில் அவர்கள் கேட்டபடி ஓய்வளித்து, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆனால் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவர், அணியின் அனுபவ வீரர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்பது தெரிகிறது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரைப் பற்றி கம்பீர் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள கம்பீர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அடுத்த தொடரில் விராட், ரோஹித்தை விளையாட வைத்து விட்டு இத்தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது இத்தொடரின் ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை