ஒரு மென்டராக நான் விடமாட்டேன் - மீண்டும் கோலியை சீண்டும் கம்பீர்!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடந்த மே 1ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது.
இந்தப் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை கொடுத்துக் கொண்ட போது ஆர்சிபி வீரர் கோலி மற்றும் எல்எஸ்ஜி அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணிகளை சேர்ந்த மற்ற வீரர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கம்பீருக்கும் விராட் கோலிக்கும் இடையே களத்தில் மிக சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நடைபெற்று, மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலான நிகழ்வாக மாறியது. அந்தக் குறிப்பிட்ட போட்டியில் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் நவீன் உல் ஹக் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடக்கம், இறுதியாக விராட் கோலி மற்றும் கம்பீர் என மாறிப்போனது.
அந்த நிகழ்வு நடந்து விராட் கோலி மற்றும் நவீன் இருவரும் சமாதானமாகி, 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது கௌதம் கம்பீர் மீண்டும் அதைப்பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,” எனது வீரர்களிடம் யாரும் தவறாகப் பேசி நடக்க முடியாது. ஒரு மென்டராக நான் விடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் வித்தியாசமான ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஆட்டம் முடியும் வரை நான் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன். ஆட்டம் முடிந்த பின்னும் எங்கள் வீரர்களுக்கு எதிராக யாராவது காரசாரமான விவாதத்தில் இறங்கினால், அவர்களைப் பாதுகாக்கும் அனைத்து உரிமைகளும் எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.