இந்திய கிரிக்கெட்டிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? - ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த கம்பீர்!
இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் படு தோல்வியைத் தழுவியது. இதனால் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து, இந்திய அணி அடுத்ததாக அஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரிக்கி பாண்டிங்குக்கும் இந்திய கிரிக்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலியாவைப் பற்றி பேச வேண்டும். விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இன்னும் விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர், மேலும் மேலும் சாதிக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் வெற்றிக்காக பசியுடன் இருக்கிறார்கள் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டிற்காக சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் ஒரு குழுவாக முன்னேறுவோம் என்று நான் நம்புகிறேன். அதேசமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட்டில் நிறைய சாதித்துள்ளனர், தொடர்ந்து அதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் மற்றும் கோலி இருவரும் சிறப்பாக விளையாடவில்லை. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட 91 ரன்களையும், விராட் கோலி ஒரு அரைசதம் உள்பட 93 ரன்களையும் மட்டுமே எடுத்தனர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறும் விமர்சனங்களு எழுந்தன.
Also Read: Funding To Save Test Cricket
அச்சமயத்தில் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு சதங்களை மட்டுமே அடித்துள்ளதாகவும், அதனால் அவரது டெஸ்ட் ஃபார்ம் கவலையளிப்பதாகவும் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் தான் ரிக்கி பாண்டிங்கின் இந்த கருத்துக்கு கௌதம் கம்பீர் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.