கம்பீர் மீது எழுந்துள்ள விமர்சனம்; பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி முடிவு!
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதையடுத்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டும் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.
அந்தவகையில் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட முதல் தொடரிலேயே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இலங்கையிடம் இந்திய அணி மண்ணைக்கவ்வியது. பின்னர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி அந்த தொடரி வென்று சாதித்தது.
இந்நிலையில் தான் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதான்மூலம்12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷும் ஆனதால். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுத்தொடங்கியுள்ளன. மேற்கொண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட்வாஷ் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரிடம் பிசிசிஐ அதிகாரிகள் 6 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த அலோசனை கூட்டத்தில் ரோஹித், கம்பீர் ஆகியோர் மீது பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் சிலர் கூறி வந்தனர். இநிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி சொதப்பும் பட்சத்தில் கௌதம் கம்பீரின் பதவி பறிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு கம்பீரை ஒருநாள் மற்றும் டி20 அணிக்கும், டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்கவும் பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் வரவுள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் மீது கௌதம் கம்பீர் அதிக கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த தொடரையும் இந்திய அணி இழக்கும் பட்சத்தில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது வேறு யாரெனும் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.