ரோஹித் சர்மா ஃபார்மில் இல்லை - ஜெஃப்ரி பாய்காட்!

Updated: Wed, Jan 31 2024 12:29 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹதராபாத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் (பிப்.02) நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இருப்பினும் அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஆகியோர் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய ஃபார்மில் இல்லை என்பதால், இங்கிலாந்து அணி இதனைப் பயன்படுத்தி 12 வருடத்தில் இந்தியாவை வீழ்த்தும் முதல் அணியாக மாறவேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கிட்டத்தட்ட 37 வயதை கடந்துள்ளார். அவர் இப்போதெல்லாம் ஒருசில கேமியோக்களை மட்டுமே விளையாடி வருகிறார். 

ஏனெனில் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் இந்தியாவில் இரண்டு சதங்களை மட்டுமே விளையாடியுள்ளார். மேலும் அவர் ஃபீல்டிங்கிலும் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். இதனால் இங்கிலாந்து அணி 12ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் அணி எனும் பெருமையை பெறுவதற்கு இதுஒரு பொன்னான வாய்ப்பு.  மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் இரண்டாவது போட்டியில் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் வாய்ப்பை கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஜெஃப்ரி பாய்காட் கூறியதைப் போலவே ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 23 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தது அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் கூட அவர் பெரிதளவில் சோபிக்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை