இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்!

Updated: Thu, Feb 01 2024 13:18 IST
இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடுவது எனது கனவு - ராஜத் பட்டிதார்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரு விலகியதால் அவர்களுக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான், சௌரப் குமார், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும், அல்லது இருவரும் அணியில் சேர்க்கப்படுவார்களாக என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், எனது காயத்திற்கு பிறகு எனக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பானது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு வீரர் காயமடையும் போது அது எப்போதும் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கும். இந்த காயத்திலிருந்து குணமடைய எடுக்கும் நேரத்தை என்னால் மாற்ற முடியாது என்று எனக்கு நானே செல்லிக்கொண்டேன். இந்த உண்மையை ஏற்று நான் மிகுந்த கவனத்துடன் எனது காயத்திலிருந்து மீள பணியாற்றி வந்தேன். எனது காயத்திலிருந்து மீண்ட பிறகு நான் முதல் முறையாக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஏனென்றால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எனது மிகப்பெரும் கனவாகும். நான் இந்திய ஏ அணிக்காக விளையாடி வந்த நிலையில், எனக்கு இந்த டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை அளித்துள்ளது. நான் எப்போதும் அதிரடியான பேட்டிங் பாணியைக் கொண்டுள்ளேன். உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் நான் அப்படிதான் விளையாடி வருகிறேன்.

ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் உள்ளது. எதிரணி பந்துவீச்சாளர்கள் எப்படி எனக்கான ஃபீல்டர்கள் செட் செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கவணித்து அதற்கேற்றது போல் எனது அணுகுமுறையை நான் செயல்படுத்தி வருகிறேன். அதிலும் ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் எப்பது எதிரணியை எதிர்கொள்கிறார்கள் என்பதை கவனித்து, அதனை எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சித்து வருகிறேன். அதில் மட்டுமே எனது கவனம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை