One-Day Cup 2024: சோமர்செட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கிளாமோர்கன்!

Updated: Tue, Sep 24 2024 09:24 IST
Image Source: Google

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களின் ஒன்றான ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்றுடன் நிறைவு பெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் சோமர்செட் மற்றும் கிளாமோர்கன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சோமர்செட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கிளாமோர்கன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய கிளாமோர்கன் அணியில் கேப்டன் கிரன் கார்ல்சன் ஒரு ரன்னில் நடையைக்கட்ட, அடுத்து களமிறங்கிய தாமஸ் பெவனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான வில்லியமும் 28 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களமிறங்கிய சாம் நார்த்ஈஸ்ட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் விளையாடிய காலின் இங்ரம் 11 ரன்களுக்கும், பில்லி ரூட் 39 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாம் நார்த்ஈஸ்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 63 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய வான் டெர் கௌடென் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் கிளாமோர்கன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சோமர்செட் அணியிலும் தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லூயிஸ் கோல்ட்ஸ்வொர்த்தியும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஆனால் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் ஆண்ட்ரூ உமீத் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜேம்ஸு ரீவும் 19 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார்.

Also Read: Funding To Save Test Cricket

பின்னர் களமிறங்கிய கேப்டன்  சீன் டிக்சன் அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 44 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்ப, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆர்ச்சி வாகன் 32 ரன்களைசேர்த்த நிலையிலும், சோமர்செட் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் கிளாமோர்கன் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக சாம் நார்த்ஈஸ்டும், தொடர் நாயகனாக எட் பர்னார்ட்டும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை