சதத்தைப் பதிவுசெய்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும், இரண்டாவது குவாலிஃபையர் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு, விர்திமான் சஹாவும் – சுப்மன் கில்லும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய விர்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் கூட்டணி சேர்ந்த சுப்மன் கில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு அசுரவேகத்தில் ரன்னும் குவித்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெள்ப்படுத்திய ஷுப்மன் கில் நடப்பு தொடரில் தனது மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்த பின்பும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத சுப்மன் கில் மொத்தம் 60 பந்துகளில் 10 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 28 ரன்களும், பொறுமையாக விளையாடிய சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள குஜராத் அணி 233 ரன்கள் குவித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளையும் குவித்தார். அதன்படி ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கிறார். இதன் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய சேவாக் 122 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் வாட்சன் 117 ரன்கள் அடித்தும், சாகா 115 ரன்கள் அடித்தும், முரளி விஜய் 113 ரன்கள் அடித்தும், ரஜத் பட்டிதார் 112 அடித்தும் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதேபோன்று பிளே ஆஃப் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் ஷுப்மன் கில் இன்று படைத்திருக்கிறார். சேவாக், சாகா, கெயில், வாட்சன் ஆகியோர் தலா 8 சிக்ஸர்கள் அடித்து இருந்த நிலையில் இந்த ரெக்கார்டு அனைத்தையும் ஷுப்மன் கில் இன்று உடைத்து இருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷுப்மன் கில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதில் விராட் கோலி 2016 ஆம் ஆண்டு 973 ரன்களும், ஜாஸ் பட்லர் 863 ரன்களும் எடுத்த நிலையில், ஷுப்மன் கில் நடப்பாண்டில் 851 ரன்களும் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று பிளே ஆப் சுற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் ஷுப்மன் கில்லுக்கு கிடைத்திருக்கிறது. கடைசியாக விளையாடிய நான்கு ஐபிஎல் ஆட்டத்தில் ஷுப்மன் கில் மூன்று சதம் அடித்திருக்கிறார். மேலும் ஒரு சீசனில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி ஜாஸ் பட்லருக்கு பிறகு ஷுப்மன் கில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார்.