டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்தார். முதல் நாள் ஆட்டத்தின் 64ஆவது ஓவரில் டேரில் மிட்செலின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கஸ் அட்கின்சன் தனது 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கேரியரின் முதல் வருடத்திலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் கஸ் அட்கிசன் படைத்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் டெர்ரி ஆல்டர்மேன், கந்த 1981ஆம் ஆண்டில் அறிமுகமாகி அதே ஆண்டும் 54 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த பட்டியலில் கஸ் அட்கின்சன் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இந்த சாதனையை எட்டியுள்ளார்.
அந்தவகையில் இந்தாண்டு ஜூலை 10 ஆம் தேதி லார்ட்ஸில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான கஸ் அட்கின்சன், வெறும் 5 மாதங்களிலேயே இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். மேற்கொண்டு இதில் அவர் மூன்று முறை 5 விக்கெட்டுக்ளையும், ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதுடன், ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இதுதவிர்த்து பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கஸ் அட்கின்சன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடித்தும் அசத்தியுள்ளர். இதுதவிர்த்து நடப்பு 2024 ஆம் ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் கஸ் அட்கின்சன் பெற்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியைப் பற்றி பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக டாம் லேதம் 63 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் உள்ள மிட்செல் சான்ட்னர் 50 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.