ENG vs NZ, 2nd T20I: கஸ் அட்கின்சன் அபாரம்; நியூசிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து!
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வில் ஜேக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மாலனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜானி பேர்ஸ்டோவுடன் அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் இணைந்தார். இவர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ள, நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்வது என்று தெரியமால் திணறினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடக்க, அவரைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக்கும் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரி ப்ரூக் 36 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய மொயீன் அலியும் சிக்சர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், அடுத்த பந்தையும் சிக்கர் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமும் குறைந்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 86 ரன்களை குவித்தார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ, மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆலன் 3 ரன்களுக்கும், டெவான் கான்வே 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - கிளென் பிலீப்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஆனால் அவர்களது ஆட்டமும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முன் எடுபடவில்லை. இதில் கிளென் பிலீப்ஸ் 22 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மே, டேரில் மிட்செ, மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே என அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் செய்ஃபெர்ட்டும் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தர்.
இதனால் நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரரான கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையையும் பெற்றுள்ளது.