கோப்பையை வெல்லாத காரணத்தால் எனது கேப்டன்சி பறிக்கப்பட்டது - விராட் கோலி
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.மேலும் இந்த ஒருநாள் தொடருக்கு கேப்டனாகவும், டெஸ்ட் தொடருக்கு துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மும்பையில் மூன்று நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். டிசம்பர் 16 அன்று மும்பையிலிருந்து தனி விமானம் மூலமாகத் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறது.
மும்பையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித்துக்குப் பதிலாக ப்ரியங் பஞ்சால், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, “ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு என்ன காரணத்தைத் தேர்வுக்குழுவினர் சொன்னார்கள் எனக் கேட்கிறீர்கள். காரணங்கள்... நிச்சயமாக, நாம் ஐசிசி போட்டிகள் எதையும் வெல்லவில்லை.
என்னால் காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த முடிவு சரியா தவறா என்பது பற்றி எவ்வித விவாதமும் கிடையாது. தர்க்கப்படி பிசிசிஐ ஒரு முடிவு எடுத்துள்ளது. அது புரிந்துகொள்ளப்பட வேண்டியது. எனக்கு அது புரிகிறது” என்று தெரிவித்தார்