ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பொறுப்பு; அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில்அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், முகமது சிராஜ், வருண் சக்ரவர்த்தி மற்றும் கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் சிராஜ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் சஞ்சு தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்தும், சிராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஏமாற்றமடைந்துள்ளார். அதிலும் ஒருநாள் போட்டிகளில் புதிய துணை கேப்டனாக ஷுப்மான் கில்லை அறிவிக்க, தேர்வுக் குழுவினரும் அணி நிர்வாகமும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முடியும் வரை பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஜெய்ஸ்வால் அணியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் சொன்னோம். ஆஸ்திரேலியாவில் அவர் விளையாடிய விதம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு அவர் தயாராக இருப்பதைக் காட்டுகிறது. எங்களைப் பொறுத்தவரையில் அவர் அணியில் மட்டும் இருக்கக்கூடாது, விளையாடும் லெவனிலும் விளையாட வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால், இப்போது, அவர் விளையாடும் லெவனில் இடம்பிடிப்பது கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஏனெனில் இந்த அணியில் ஷுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் நிச்சயம் இன்னிங்ஸைத் தொடங்குவார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும், சுப்மான் கில் 3வது இடத்தில் களமிறங்குவார் என்றும், விராட் கோலி 4வது இடத்தில் களமிறங்குவார் என்றும் யாராலும் சொல்ல முடியாது. ஒருவேளை இது நடந்தால், ஸ்ரேயாஸ் ஐயர் எங்கே விளையாடுவார்? ஒரு வீரர் ஃபார்மில் இருக்கும்போது, அவர் நிச்சயம் விளையாட வேண்டும்.
இந்த அணியில் ஷுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்படாமல் இருந்திருந்தால், நிச்சயம் யஷஸ்வி தொடக்க வீரராக விளையாடி இருப்பார். ஆனால் இப்போது அவர் துணை கேப்டன். எதிர்காலத்தை மனதில் கொண்டுதான் அவரை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை அடுத்த ஆறு-எட்டு மாதங்களில், மாற்றம் ஏற்படும் போதெல்லாம், கில்லுக்கு அந்தப் பொறுப்பு (தலைமை) வழங்கப்படும்.
ஒருவேளை அவர் இந்தப் போட்டி முடியும் வரை காத்திருந்திருக்கலாம். நான் கில் மீது மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்று நான் விரும்பினேன். பேட்டிங் வரிசையில் இடது-வலது கூட்டணி மிக முக்கியமானது. மேலும் அவரால் அங்கு சுதந்திரமாக விளையாட முடியும். மேலும் தற்போது அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).