நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அணியை உருவாக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். எனினும் இந்திய அணி அரைஇறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து வெளியேறியது . இந்த நிலையில் இந்திய அணியில் டி20க்கு தனி அணியாகவும், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு என்று தனி அணியையும் உருவாக்க வேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ இறங்கி உள்ளது.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில், “டி20 கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டை விட நெஹ்ராவுக்கு தான் நிறைய விஷயங்கள் தெரியும். ஏனென்றால் டி20 கிரிக்கெட் கடந்த 15 ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளது. முதலில் 170 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கு போதுமானதாக இருக்கும். தற்போது அதனை 16 வது ஓவரிலே வீரர்கள் எட்டி விடுகின்றனர். இதனால் ஆசிஸ் நெஹ்ரா, டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார்.
இதனால் தான் சொல்கிறேன் நெஹ்ராவுக்கு டி20 கிரிக்கெட் குறித்து நிறைய தெரியும். நான் டிராவிட்டை அவமரியாதையாக பேசவில்லை. என்னுடைய கருத்தை சொன்னேன். டிராவிட்டும் , நெஹ்ராவும் இந்திய கிரிக்கெட் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறார்கள். டிராவிட்டுக்கு கிரிக்கெட் பற்றி நிறைய தெரியும். ஆனால் டி20 கிரிக்கெட் கொஞ்சம் கடினமான விளையாட்டாகும். இதில் சமீபத்தில் யார் விளையாடினார்களோ அவர்கள் தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார்கள்.
அதற்காக நீங்கள் ராகுல் டிராவிட்டை டி20 கிரிக்கெட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நெஹ்ராவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து அடுத்த உலக கோப்பைக்கான டி20 இந்திய அணியை உருவாக்கலாம். இரண்டு பயிற்சியாளர்கள் நியமித்தால் அது ராகுல் டிராவிட்டுக்கு எளிமையாக இருக்கும்.நியூசிலாந்து தொடருக்கு டிராவிட் ஓய்வு எடுத்தது போல், எதிர்காலத்திலும் அவர் ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது நெஹ்ரா அந்தப் பணியை செய்வார்.
இந்திய அணி டி20 கிரிக்கெட்டை அணுகும் முறையை மாற்ற வேண்டும். டி20 கிரிக்கெட்டில் முதல் ஆறு ஓவர் மிகவும் முக்கியம். அந்த பவர் பிளேவில் நீங்கள் சொதப்பினால் , அதன் பிறகு ஹர்திக் பாண்டியாவும் சூரியகுமார்யாதவும் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்தால் மட்டுமே அணியை காப்பாற்ற முடியும். அவர்களும் அன்றைய ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை என்றால் நீங்கள் குறைவான ரன்களையே எடுப்பீர்கள்.
இங்கிலாந்து அணி தங்களுடைய அணுகுமுறையை மாற்றியதால் தான் இரண்டு உலக கோப்பையை அவர்கள் வென்று இருக்கிறார்கள். நான் சொல்வதெல்லாம் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தங்களுடைய ஸ்டிரைக் ரேட்டை அதிக படுத்த வேண்டும்.110, 120 ஸ்ட்ரைக் ரைட் வைத்துக்கொண்டு உங்களால் 180 ரன்கள் அடிக்க முடியாது. முதல் 10, 12 ஓவர்களில் நீங்கள் 90 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். இதை ஒரே இரவில் வீரர்கள் மாற்றிக் கொள்ள முடியாது .எனினும் டி20 யை நாம் அணுகும் முறையை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.