சாஹலுக்கு முதன்மை சுழற்பந்து வீச்சாளர் முன்னுரிமை கொடுப்பேன் - ஹர்பஜன் சிங்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இதில் ஒருநாள் உலகக்கோப்பையை நழுவவிட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை சுழற்பந்துவீச்சாளர்காக குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோர் தேர்வுசெய்யப்படலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.
அதேசமயம் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் குறுகிய காலத்திலேயே இந்திய அணியின் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக உருவெடுத்த யுஸ்வேந்திர சஹால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக 2022ஆம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட யுஸ்வேந்திர சாஹல், அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் போனது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அதனால் இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலாவது சஹால் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக சாஹல் தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் மற்றவர்களை விட சாஹலுக்கு முதன்மை சுழற்பந்து வீச்சாளர் முன்னுரிமை கொடுப்பேன். அவர் ஏன் கழற்றி விடப்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அதற்கான காரணம் அவருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்றும் நம்முடைய நாட்டில் அவரை விட சிறந்த மனிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் இருக்கிறார் என்று நான் கருதவில்லை. நம்மிடம் அவரை விட தைரியமான சுழற்பந்துவீச்சாளர் இருக்கிறார் என்றும் நான் நினைக்கவில்லை. அவருக்கு அடுத்தபடியாக ஜடேஜாவை இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக நான் தேர்ந்தெடுப்பேன். வெஸ்ட் இண்டீஸில் இதற்கு முன் நான் விளையாடியுள்ளேன்.
அங்கு எப்போதும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் ஆதரவு இருக்கும். அங்கு கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்ற மைதானங்கள் இருக்கும். எனவே நீங்கள் சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியம். அங்கே அசத்துவதற்கு உங்களுடைய அணியில் குறைந்தது 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.