ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு!

Updated: Sun, Jun 23 2024 09:52 IST
ஹர்திக் பாண்டியா தான் எங்கள் அணியின் முக்கிய வீரர் - ரோஹித் சர்மா பாராட்டு! (Image Source: Google)

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டி நேற்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தின் மூலமும், மற்ற பேட்டர்களின் ஒத்துழைப்பின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 50 ரன்களைச் சேர்த்தார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் இந்திய அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவால் என்ன செய்ய முடியும் என்பது தனக்கு தெரியும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “களத்தில் அதிர்டையாக விளையாடுவது குறித்து நான் நீண்ட காலமாக பேசி வருகிறேன். தற்போது அதைதான் நாங்கள் செயலப்டுத்தி வருகிறோம். அதனால் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். மேலும் இந்த சூழல், பிட்ச் ஆகியவற்றுக்கு ஏற்ப நாங்கள் விரைவாக மாறிக் கொண்டோம். இந்த மைதானத்தில் காற்றும் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது.

ஒட்டுமொத்தமாக நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். அணியில் உள்ள 8 பேட்ஸ்மேன்களும் தங்களின் பணியினை செய்தாக வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. இன்றைய ஆட்டத்தில் ஒருவர் அரைசதம் அடித்ததன் மூலமாக 196 ரன்களை எட்டினோம். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அரைசதம், சதங்கள் அடிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பேட்டர்களின் ஒரே பணி பந்துவீச்சாளர்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருப்பது தான்.

இன்றைய ஆட்டத்தில் எங்களது பேட்டர்கள் அனைவரும் அதனை தான் செய்தனர். இப்படி விளையாட தான் விரும்புகிறோம். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். கடந்த போட்டியில் சொல்லியதை போல், ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் எங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாப் 5 வீரர்கள் அதிரடியாக விளையாடிய பின், நன்றாக ஃபினிஷ் செய்ய விரும்புகிறோம். அவரால் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் அவர்தான். அவரால் இதனை தொடர்ந்து செய்ய முடியுமானால் அது எங்களுக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும். மேலும் பந்துவீச்சாளர்களுடன் ஒரு விஷயத்தை ஆலோசித்து அது சரியாக நடக்கும் போது சிறப்பாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.  எங்கள் திட்டத்தின் படி அனைவரும் சிரப்பாக செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை