இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
2023 கிரிக்கெட் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்குள் ஒரு நிலையான 12-14 வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டனாக எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சமீப காலமாக இந்த யோசனையை பரிசீலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த யோசனையை பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியாவிடம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஹர்திக் முடிவெடுக்க சிலநாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஒயிட் பால் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக்கிடம் ஒப்படைக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. இந்த யோசனையை ஹர்திக்கிடமும் விவாதித்துள்ளது. ஆனால், அவர் சில நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார். அவர் சொல்லும் முடிவை பொறுத்தும், புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் இந்த விவகாரத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
யுஏஇ டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய காரணத்தினால் இந்தியாவின் விராட் கோலியிடமிருந்து கேப்டன்சி பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா இந்தியாவை வழிநடத்தினார். ஆனால் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி கண்டு வெளியேறியது. இதனால் அவரது கேப்டான் பொறுப்பைப் தற்போது ஹர்திக் பாண்டியாவிடம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.